Dienstag, 14. Mai 2013

தப்பித்துக்கொள்!!!

தப்பித்துக்கொள்!!!

நல்ல உள்ளத்தை
நாளும் போற்று
எல்லோரும் வாழ
இனிது பணியாற்று

மாயவலைகளில்
மயங்கிவீழாதே
ஆய கலைகளை
அறிந்து முன்னேறு

தீய நினைவுகளை
தீயிட்டுக் கொழுத்து
தூய நினைவுகளால்
துணிவினை ஏற்று

வேதங்கள் போற்று
வேந்தனை வேண்டு
நாதங்கள் மீட்டியே
நாளும் பண்பாடு

Sonntag, 12. Mai 2013

உயிரோடு உயிர்கோர்ப்போம்

 

ஏதும் அறியாமல்
எண்ணம் பிறக்குது
போதும் போதுமுன்
பேசும் நினைவுகள்

பொங்கும் ஆசைகள்
கோலம் போட
போகும் பாதையோ
நீளமாக
அங்கும் இங்கும்
அன்பு வெள்ளமாக
சிந்தும் நதி
சந்தம் சொல்லிப்பாடுதே

வள்ளுவனின்
வார்த்தைக்குள்ளே
வாழ்ந்து
வாழும் காலமெல்லாம்
இருப்போம் சேர்ந்து
உள்ளம் எங்கும்
இன்பம் பொங்க
உயிரோடு
உயிர்கோர்ப்போம்
உணர்வோடு
ஒன்றாகுவோம்
நாமே..

Donnerstag, 25. April 2013

உன் நினைவு

உன் நினைவு

ஊற்றாக உள்ளே
உன்நினைவு பெருகுது
காற்றாக விரிந்தே
கவிதையாக மலருது

மாற்றம் கேட்டு
மனமும் தவிக்குது
நேற்றும் இன்றும்
நெஞ்சம் துடிக்குது

உரிமை உணர்வோடு
உயிரும் பேசுது
எரியும் நெருப்புக்குள்
எண்ணங்கள் வாழுது

வெற்றியின் வேர்தேடி
வேதனைகள் நீளுதே
பற்றிய கொடிபோல்
பாசமிங்கு படருதே

கம்பனுக்கு மகளாகி
கண்ணுக்குள் தேடியே
நம்பவேண்டுமென்றே
நாளெல்லாம் பாடுகின்றேன்

வெள்ளைக்காரிகள்!!!


வெள்ளை நிலாக்கள்
வீதி ஊர்வலம்
வருகிறார்கள்

கள்ளத்தனம்
கண்ணிலில்லை
காமத்தாக்கம்
ஏதுமில்லை

கொள்ளை போக
ஓன்றுமில்லை
கொடியில் பூக்கும்
முல்லை பூக்கள்

பாதி உடையோ
சரிந்து விழ
மீதி நடையில்
தெரிந்து வர

அந்தரங்கங்கள்
ஆடி வர
இந்திர பெண்போல்
இவர்கள் திரிகிறார்கள்

மேலாடை கட்டிய
மின்னல் தாரகைகள்
நூலாடைக்குள்
நுழைந்து வாழாமல்

பாலாடை நீக்கி
பார்த்தால் என்ன
பார்வைகளில்
பேதமில்லை

எண்ணங்களில்
கறைகளின்றி
எல்லோரிடமும்
பேசுகிறார்கள்

தொட்ட போதும்
கை விட்ட போதும்
காதலில்லை…

காதலென்ற
சொல்லுக்குள்
வாழ்க்கையுமில்லை..

இந்த நாளை
சுவைத்து
இன்பமுடன்
வாழ்கிறார்கள்…

நொடிக்கொருமுறை
பூக்காவிட்டாலும்
அடிக்கடி
இறந்து மலர்கிறதே
இந்தக்காதல்
எப்படி..!!!



Montag, 22. April 2013

கவிதையும் நானும்...


எதுகையும் மோனையும்
எனக்கிங்கே தெரியாது
எழுதிடும் போதினிலே
எதுவுமே தோன்றாது

அது சரியா பிழையாவென்று
எண்ணவும் வாராது
உண்மையை சொல்ல
உள்ளம் துடிக்கிறதே

வடிவான தமிழில்
வளைத்துப்பேசவும் வாராது
வாழ்வினில் நடப்பதை
வார்த்தையில் வகுக்கிறேன்

கண்ணுக்குள் வளர்கின்ற
கற்பனைக்கனவுகளையும்
பண்ணாக பாடிவிடும்
பாவியின் நெஞ்சமும்

கவிதைக்கு அழகென்று
கருவை அழித்துவிட்டு
கைத்தட்டு கேட்டுநிற்கும்
கையேந்தி நானில்லை

பொய்பூசி மைபூசி
புகழுக்காக தேன்பூசி
உண்மையை புதைத்து
உருவாக்க பிடிக்கவில்லை

பாசம் என்றபெயரோடு
வேசம் தரித்து நிற்கும்
மோசக்காரர்கள் எல்லாம்
மாற வேண்டுகின்றேன்

பொய்யை விற்று
மேன்மை காணமுடியுமா
வெறும் வார்த்தை
கோர்த்து உயிர்வாழமுடியுமா

நிர்வாணம் அழகில்லை தான்
நிஜங்களை ரசிப்பதற்காக
அலங்காரம் செய்யலாம்
அதுவொன்றும் தவறில்லை

பிறக்கின்ற கவிதைகள்
பேசவேண்டாமா சொல்
சுமக்கின்ற குழந்தைகள்
சுகமாக்க வேண்டாமா

வாழ்க்கை கடலிலே
நல்லது மட்டுமாவுள்ளது
பொங்கும் கடலும்
புயலும் இல்லையா

அலைகளுக்கு இடையினில்
அமைதியும் இருக்கிறது
கரைகளை தாண்டிட
ஆசையாய் துடிக்கிறதே


Mittwoch, 3. April 2013

தோளோடு சாய்ந்திட வா ...

தோளோடு சாய்ந்திட வா ...
 
 
அழகான பாடலே
அடி நெஞ்சை ஆளுதே
பழகிய நினைவுகள்
பறந்தெங்கோ போகுதே

இதமான நாளிலே
இதயமும் மகிழுதே
பருவத்தின் மாற்றங்கள்
பனிப்பூவாய் விழுகுதே

கண்ணுக்குள் காட்சிகள்
கலந்தென்னை மீட்டுதே
பெண்ணுக்குள் சாட்சிகள்
பேசாமல்பேசி வாட்டுதே

வெண்நிற மேகத்துக்குள்
விளையாடும் நிலவே நில்
மண்ணினில் மலரொன்று
மடிவதும் சரிதானா சொல்

பாலோடு பழம்கொண்டு
பரிமாற விருந்துண்டு
தோளோடு சாய்ந்திட
துணையாக வா இன்று

நாளோன்று நீங்கினால்
நாம் தேடி பார்ப்போமா
நூலாக தேய்கின்றேன்
நீ அதை அறிவாயா...

Freitag, 22. März 2013

வெற்றி தரும்

வெற்றி தரும்

 

ஊற்றெடுக்கும்

நினைவுகளை
ஓரங்கட்டி
வைத்தால்

நேற்று முளைத்த
வேதனையும்
நெஞ்சுக்குள்ளே
இருந்துவிடும்

காற்றினிலே
கவிதையாக்கி
கைப்படவே
எழுதிவிட்டால்

வெற்றிடத்தை
நிரப்பிவிடவே
வேறு எண்ணம்
தோன்றிவிடும்

சுற்றிவரும் உலகம்
அதைப் பற்றியதே
வாழ்க்கையும்

முற்றிவிடும் ஞானம்
முளித்திருந்தால்
போதும்

வெற்றி தரும்
விதையாய்
வசந்தம்
வீட்டினுள்ளே
நுழையும்!!