Freitag, 22. März 2013

வெற்றி தரும்

வெற்றி தரும்

 

ஊற்றெடுக்கும்

நினைவுகளை
ஓரங்கட்டி
வைத்தால்

நேற்று முளைத்த
வேதனையும்
நெஞ்சுக்குள்ளே
இருந்துவிடும்

காற்றினிலே
கவிதையாக்கி
கைப்படவே
எழுதிவிட்டால்

வெற்றிடத்தை
நிரப்பிவிடவே
வேறு எண்ணம்
தோன்றிவிடும்

சுற்றிவரும் உலகம்
அதைப் பற்றியதே
வாழ்க்கையும்

முற்றிவிடும் ஞானம்
முளித்திருந்தால்
போதும்

வெற்றி தரும்
விதையாய்
வசந்தம்
வீட்டினுள்ளே
நுழையும்!!

Donnerstag, 21. März 2013

நேசக்குழந்தைகளாவோம்


நேசக்குழந்தைகளாவோம்


பொல்லுபிடித்துக்கொண்டும்
புதுக்கவிதை பாடுவோம்
பூங்காற்றில் ஏறிச்சென்று
புதுவார்த்தை தேடுவோம்

அந்திசாயும் நேரத்தில்
அழகு நிலவையும்
ரசிப்போம்

முந்தி முந்தி ஓடிடும்
முதல் அலையை
பிடிப்போம்

கடலை பிடிக்கும்
குழந்தைகள் போல்
மாறுவோம்

விடலைப்பருவம் போனாலும்
விண்ணில் மீன்கள்
பறிப்போம்

காலம் சென்றாலும்
கைகள் கோர்த்து
நடப்போம்

காதல் தேவையில்லை
காம வேலையுமில்லை
கவிதை சேகரிப்போம்

உலகை தாண்டி
பறக்கும் மனசின்
வேகம் அதிகரிப்போம்..

நிலவு வானில்
நீயும் நானும்
நேசக்குழந்தைகளாவோம்.

Montag, 18. März 2013

சாகும்வரை சுமப்பேன்


சாகும்வரை சுமப்பேன்

பச்ச வயலெங்கும்
பார்வைகள் மேய்கிறது
உச்சி வெயில் வந்து
உன்னினைவை தைக்கிறது

அச்சடித்த கடதாசி
அழிந்திடலாம் மாமா
மச்சம் போல் மனசில்
மாட்டிப்புட்டேன் ஆமா

வெத்தல போட்டதுபோல்
வெந்தது என் நெஞ்சும்
சத்தியமா ஒன்ன நான்
சாகும்வரை சுமப்பேன்
.
காற்றும் கடந்தது…

மின்னலொன்று
மண்ணில் தோன்ற
மெல்ல மெல்ல
நானெழுந்தேன்..

சின்னச்சின்ன
சிறகுமுளைக்க
வண்ணக்கவிகளை
தொடுத்தேன்..

பூவில் வீசும்
காற்றாய்மாறி
பூந்தென்றலாய்
நடந்தேன்..

புதிய பார்வை
என்னைத்தீண்ட
உன்னை
எதிர்நோக்கியே
வந்தேன்..

சந்தித்தவேளையில்
சந்தோசம் பிறந்தது
சிந்தித்த நேரத்தில்
சிறிய தூரம்
கடந்தது…

முதுகுகாட்டி
முகம் மறைத்து
போகின்றேன்..
மனதில் உந்தன்
நினைவுகளை
மீட்டுகின்றேன்..

கடந்து சென்ற
காலங்கள்
தொடர்ந்து
வருவதில்லை…
படர்ந்துவிட்ட
நேசமோ
இறந்துவிடுவதும்
இல்லை..

காற்றும் கடந்தது
கனவும் கலைந்தது
நேற்றும் மறைந்தது
நெஞ்சம் சுமந்தது..