Montag, 22. April 2013

கவிதையும் நானும்...


எதுகையும் மோனையும்
எனக்கிங்கே தெரியாது
எழுதிடும் போதினிலே
எதுவுமே தோன்றாது

அது சரியா பிழையாவென்று
எண்ணவும் வாராது
உண்மையை சொல்ல
உள்ளம் துடிக்கிறதே

வடிவான தமிழில்
வளைத்துப்பேசவும் வாராது
வாழ்வினில் நடப்பதை
வார்த்தையில் வகுக்கிறேன்

கண்ணுக்குள் வளர்கின்ற
கற்பனைக்கனவுகளையும்
பண்ணாக பாடிவிடும்
பாவியின் நெஞ்சமும்

கவிதைக்கு அழகென்று
கருவை அழித்துவிட்டு
கைத்தட்டு கேட்டுநிற்கும்
கையேந்தி நானில்லை

பொய்பூசி மைபூசி
புகழுக்காக தேன்பூசி
உண்மையை புதைத்து
உருவாக்க பிடிக்கவில்லை

பாசம் என்றபெயரோடு
வேசம் தரித்து நிற்கும்
மோசக்காரர்கள் எல்லாம்
மாற வேண்டுகின்றேன்

பொய்யை விற்று
மேன்மை காணமுடியுமா
வெறும் வார்த்தை
கோர்த்து உயிர்வாழமுடியுமா

நிர்வாணம் அழகில்லை தான்
நிஜங்களை ரசிப்பதற்காக
அலங்காரம் செய்யலாம்
அதுவொன்றும் தவறில்லை

பிறக்கின்ற கவிதைகள்
பேசவேண்டாமா சொல்
சுமக்கின்ற குழந்தைகள்
சுகமாக்க வேண்டாமா

வாழ்க்கை கடலிலே
நல்லது மட்டுமாவுள்ளது
பொங்கும் கடலும்
புயலும் இல்லையா

அலைகளுக்கு இடையினில்
அமைதியும் இருக்கிறது
கரைகளை தாண்டிட
ஆசையாய் துடிக்கிறதே


Keine Kommentare:

Kommentar veröffentlichen