Donnerstag, 31. Januar 2013

நெஞ்சம் வாடி உன்னைத்தேடும்...!!!


 

 நெஞ்சம் வாடி உன்னைத்தேடும்...!!!

 
 பிள்ளைத்தமிழில் பேசும் நிலவே
முல்லை மலரே முகம் காட்டு
கொள்ளைகொள்ளும் இனியதமிழே
வெள்ளை மனதை நீ காட்டு

மெல்ல மெல்ல நெருங்க நானும்
மேகமாக போகிறாயே நீயும்
சொல்லச்சொல்ல நாவில் ஊறும்
செந்தமிழோ என்னை ஆளும்

எண்ணச் சிறகில் ஏறி நித்தம்
எழுத்தில் கவியாய் வாழும்
வண்ணக் கோலம் போடும்
வானவில்லாய் உந்தன் ஜாலம்

புண்ணாய் எந்தன் நெஞ்சம் வாட
பூவாய் உந்தன் அன்பைத் தேட
பெண்ணாய் இங்கு பூத்திருக்கும்
பேதை உள்ளம் உன்னைப்பாடும்


Mittwoch, 30. Januar 2013

கண்ணீர்

கண்ணீர்

விழிகளில் ஒருமேகமும்
பொழிந்திடப் போராடும்
மொழிகள் ஏதுமின்றியே
மௌனமாய் கரைந்தோடும்

ஊன் உருகி உயிரெழுதும்
உனக்காக தினம் கவியெழுதும்
வான் மழையாக வந்தாலும்
வாழ்த்தாக அதை மனமேற்கும்

ஊற்றாக பெருகினாலும்
ஊமையாக அனைபோடும்
ஏற்றாத ஒளியின்றியே
எவருக்குத் தெரியக்கூடும்





Montag, 21. Januar 2013

உன்னாலே உன்னாலே..



 உன்னாலே உன்னாலே..
வாழ்வதும்
வளர்வதும்
உன்னாலே
வீழ்வதும்
விழிநீர்ப்பதும்
உன்னாலே

மூழ்குவதும்
முத்தெடுப்பதும்
உன்னாலே
தாழ்வதும்
தவிப்பதும்
உன்னாலே

பாடுவதும்
பாதைதவறுவதும்
உன்னாலே
தேடுவதும்
தேவையில்லை
என்பதும்
உன்னாலே

வாடுவதும்
வலிசுமப்பதும்
உன்னாலே
ஓடுவதும்
ஓயாமல் துடிப்பதும்
உன்னாலே   









Sonntag, 20. Januar 2013

நீவேண்டும் என்றே நான் பாடினேன்...



 நீவேண்டும் என்றே நான் பாடினேன்...

உயிருக்குள் உயிரக வந்து
உணர்வுக்குள் தீயை தந்து
மனதுக்குள் கலவரம் செய்கின்றாய்

மனிதமும் கரைந்து போக
மறுநொடி இறந்து மீள-தினமும்
நீ என்னை தாக்குகின்றாய்


இரவு பாடும் பாடலாய்
இதயம் தேடும் தேடலாய்
உறவு வாழ வேண்டியே
உன்னை நானும் கேட்கின்றேன்

அழகான வாசம் நீயே
அதில் மேவும் ஜீவன் நானே
நிழலாக நித்தமும் தொடர்ந்தே
நீ வேண்டும் என்றே சொன்னேன்

பாடல்

Donnerstag, 17. Januar 2013

தேடுகின்றேன் வாடுகின்றேன் நான்...


தேடுகின்றேன் வாடுகின்றேன் நான்

தென்றலே வா
தேடுகின்றேன் நான்
இன்பமே வா
வாடுகின்றேன் நான்

தேகத்தின் மேலே
மேகமாய் நீந்தவே
மோகத்தின் தீயும்
மோதியே தாக்குதே

இரவின் ஈரம்
இதயத்தை தாக்கும்
உறவின் பாரம்
உயிரையும் வாட்டும்

துள்ளும் மனமும்
துடிக்கும் இதயமும்
அள்ளும் வேளையில்
அமைதி கொள்ளும்.

Mittwoch, 16. Januar 2013



 உன்னால் உயிர்க்கட்டும்....

உறைந்த பனிப்போல்
கரையாமல் இருக்கின்றேன்
உன்பாசப்பார்வைகளால்
தீண்டும் வரைக்கும்

அழுத விழிகளையும்
துடைக்காமலிருக்கிறேன்
அன்பின் கரங்கள்
தொடும் வரைக்கும்

உன்னைக்கண்டதும்
உதடுகள் பூக்கும்
மனம் காய்க்கும்
மௌனம் கனியும்

என் காதலே
என்னையும் எரித்துவிடு
உள்ளமும் உயிரும்
உன்னில் மரிக்கட்டும்

நேசிக்காமல் போனால்
சுவாசிக்காமலிருப்பேன்
உன்னால் உயிர்க்கட்டும்
என் ஜீவனும் மறுமுறை 

Dienstag, 15. Januar 2013

அமைதியிலும்…

அமைதியிலும்…

சித்தம் கலங்க
சிந்தை நொருங்க
முத்தம் கொடுக்கும்
முத்து நிலவே

பித்தம் தலைக்கேற
பேதமை எனைச்சூழ
நித்தமும் ஆளும்
நேச உறவே

பாத்தும் பாராமல்
பார்வை ஓயாமல்
சுத்தும் உள்ளத்தின்
சுடரே கதிரே

கத்தும் கடலாய்
கதறும் உடலோடு
சத்தம் செய்யாமல்
சாந்தி அடைகின்றேன்.


Sonntag, 13. Januar 2013


அன்பு
ஆணிவேரைப்போல்
வலிமையானது
வாழ்வானது
சாவின் சக்தியைவிட
சக்திவாய்ந்தது
உயிர்குடிக்கும்
கொடிய நோயானது..
மதி பறிக்கும்
மயக்க வெறியானது..
தீயின் பிளம்புகளால்
திரண்டு இருப்பது..
அன்பை அழிக்கவும்
முடியாது
அணைக்கவும் இயலாது
எந்த சக்தியாலும்
எதிர்த்து ஜெயிக்க
முடியாது!!

Samstag, 12. Januar 2013

சொல்லாத மௌனத்தில்…!!

புறமுதுகு காட்டுகின்றேன்
புரியவில்லை நீ
பூமுகத்தை மறைக்கின்றேன்
பார்க்கவில்லை நீ

இருளைக்கிழிக்கும் ஒளியை
உணரவில்லை நீ
இதயம் சுமக்கும் வலியையும்
காணவில்லை நீ

அமைதியாக போகின்றேன்
அறியவில்லை நீ
அழுதுவடித்து வாழ்வதையும்
அறியவில்லை நீ

அறிவுத்திறனால் ஆளுகின்றேன்
தெரியவில்லை நீ
அழிவிலிருந்து காக்கின்றேன்
தெரியவில்லை நீ

மழையின் துளிகள் பட்டு
மடிந்து போவாயென்று
இமைக்குடைகளை மூடியே
இருக்கின்றேன் பாரு

பொறுமையை இழக்காமல்
பூத்திருக்கின்றேன் நான்
புவியையும் கெடுக்காமல்
பேசாமல் இருக்கிறேன்

நல்ல மனிதனால்
தீயதை செய்யமுடியாது
நம்பியிருப்பவரின்
கையை உடைக்கமுடியாது

இதுவும் ஓர் அதிசயம்
இயற்கையின் புதுசுகம்
அற்புதம் நடந்துவிட
அறிவு கரம் கொடுத்திடும்

Donnerstag, 10. Januar 2013

கவிதைப்பூக்கள்!!!

என்னுள்  நீ வேண்டும்

எந்தையும் தாயுமாய்
என்றென்றும் நீ வேண்டும்
சிந்தையும் செயலுமாய்
சொந்தமாய் நீ வேண்டும்

பக்தியின் பாடல்போல்
பாலகோடி இசைவேண்டும்
சக்தியும் சிவனுமாய்
சந்தோசம் பெறவேண்டும்

எண்ணோடும் எழுத்தோடும்
இன்பங்கள் பெறவேண்டும்
மண்ணோடும் மரபோடும்
மலர்கின்ற நிலைவேண்டும்

தூங்கும் பொழுதெல்லாம்
தூங்காத கனவு வேண்டும்
ஏங்கும் நேரங்களிலெல்லாம்
எழுத்தாக நீ மலரவேண்டும்


உயிரே வாருவாயா!

ஆவி துடிக்கின்றது
அன்பே வருவாயா
கூவியழைக்கின்றேன்
குரல்கேட்டு வருவாயா

பாவி முகம் காண
பறந்து வருவாயா
தேவி தரிசனத்தை
தினமும் தருவாயா

உருகிப் பாடுகின்றேன்
உன் அருள் தருவாயா
பெருகிடும் அன்பினில்
பிரியாமல் இருப்பாயா


கவிமடல்கள்..